விபூதி சித்தர் ஸ்ரீ சுப்பாராவ் பீடம்

வம்சாவளியின் கதை! 

ராஜராஜ சோழனின் பேத்தியும், ராஜேந்திர சோழனின் இளைய மகளுமான இளவரசி அம்மங்கதேவியைக் கீழை சாளுக்கிய தேசத்தின் இளவரசனும், ராஜராஜ சோழனின் மகளான இளைய குந்தவை பிராட்டியின் மகன் ராஜராஜ நரேந்திரனுக்குத் திருமணம் செய்து தருகிறார்கள். (மாமன் மகள்- அத்தை மகன் உறவு முறை.) இவர்களுக்கு 1025 ஆண்டில் பிறந்த மகன்தான் முதலாம் குலோத்துங்க சோழன் @ ராஜேந்திர சாளுக்யன். இவன் தாய் வழியில் சோழன், தந்தை வழியில் வேங்கி நாட்டு கிழக்கு சாளுக்கிய மன்னன்!

நம் விபூதி சித்தர் தாத்தாவின் பதிமூன்றாவது மூதாதையர் வேத சம்ரட்சணம் செய்யும் பொருட்டு தஞ்சையின் திருவிடைமருதூர் (எ) மத்யார்ஜுனம் ஊரிலிருந்து திருமணச் சீதனமாகச் சாளுக்கிய தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்! கல்வி கற்ற பண்டிதர்கள், வித்துவான்கள், வேத விற்பன்னர்கள், வைத்தியர்கள், பாணர்கள், கலைஞர்கள் என சிலரை ராஜேந்திர சோழன் தேர்ந்தெடுத்து இளவரசியின் திருமணச் சீதனமாக கிபி-1023ல் சாளுக்கிய தேசத்திற்கு அனுப்பினான். 

பிற்பாடு அங்கேயே சில நூற்றாண்டுகள் கழிந்தன. அங்கே புலம் பெயர்ந்த ஒரு குலத்தோன்றலாக வந்த சுப்பிரமணியம், ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த விஜயநகரப் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவ ராயரால் நிதி ஆலோசனை மற்றும் சமஸ்தான வரி வசூல் நிர்வாகத்தைக் கவனிக்க அமர்த்தப்பட்டார். மன்னர் இறந்தபின் சுல்தான் படையெடுப்பு தீவிரமாகியதால் கிபி1530 வாக்கில் தமிழகம் வந்தார். கொங்குமண்டல தேசத்தில் கொடுமுடிக்கு அக்கரையில் காவிரி ஓடும் தலமான அய்யம்பாளையத்தைத் தன் ஞானதிருஷ்டியில் தேர்ந்தெடுத்து வசிக்கலானார். 

அவர் வாழ்ந்த அய்யம்பாளையத்தில் 1561ல் சமாதி பிரவேசம் செய்தார். அரசமரத்தடியில் உள்ள இவருடைய ஜீவசமாதியை ஸ்ரீ சங்கிலி கருப்பர் காவல் காக்கிறார். சமாதி பீடத்தின் மேலுள்ள சிவலிங்கத்திற்குப் பாலபிஷேகம் செய்யும்போது இன்றும் தன்னுடைய முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஸ்ரீ விபூதி சித்தர் என்ற நாமத்துடன் நமக்குத் தரிசனம் தருவது யாவரும் அறிந்ததே. மேலும் அவர் 1000 வருடங்கள் சமாதி நிஷ்டையில் இருந்து அபய பரிபாலனம் செய்வதாக உறுதி தந்துள்ளார். தன் பிரதம சீடராகப் பாம்புச்சித்தர் இருந்தார். 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு மகரசங்கராந்தி நாளில் (தை பொங்கலன்று) பாம்புச் சித்தர் சமாதி பிரவேசம் செய்தார். அருகிலுள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கருவறைக்குக் கீழே சமாதியில் உள்ளார்.

இப்போதும் நம் விபூதி சித்தர் தாத்தாவின் பீடத்தில் அவர் அருட்பார்வையால் எப்பேர்ப்பட்ட பில்லிசூனிய வைப்பும் பீடிக்கப்பட்ட நிலையில் அங்கு வரும் பக்தரைவிட்டு அண்டாமல் ஓடிவிடும். தன் வம்சாவளியில் வருகிற ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவரை யோகியாக/ ஞானியாக/ சித்தராகத் தயார் படுத்தி வருவதாக அருள்வாக்கில் உரைத்தார். சமாதி பீடத்தில் ராஜகணபதியும், ராகுகேதுவும் எழுந்தருளியுள்ளனர்.



சமாதி நிலவறை தேர்வு முறை! 

அண்மையில் எங்கள் மூதாதையர் விபூதி சித்தர் தாத்தாவின் சமாதி பீடத்தில் வழிபட்டு ஆசிபெற்ற பின், சுற்றுமுற்றும் காலாற நடந்து நோட்டம் விட்டேன். பதினாறாம் நூற்றாண்டில் அவர் வசம் கணிசமான நிலங்கள் இருந்துள்ளதும், சமுதாய நன்கொடை/அன்னதான கட்டளைகளுக்காகவே குறிப்பிட்ட அளவு நிலத்தில் முப்போகம் விவசாயம் செய்து அது தொன்றுதொட்டு நடந்து வந்தது என்பதை அறிந்தேன். எங்கள் கிராமத்து வீட்டுப்பரணில் வளையத்தில் இணைக்கப்பட்ட செப்புப்பட்டயங்கள் இருந்ததைத் தன் சிறுவயதில் பார்த்துள்ளதாய் என் சிற்றப்பா சொன்னார். பழைய விவரங்களின்படி இந்த அக்ரஹார குன்னத்தூர் அய்யம்பாளையம் கிராமத்தில் மொத்தம் 1275 ஏக்கர் நஞ்சை/புஞ்சை நிலங்கள் இருந்துள்ளன. கோயில் கட்டளை மான்யம் ஆகியவற்றுக்கென 52 ஏக்கர் இருந்துள்ளன. ராஜமந்திரி, கொனாசீமா, அத்தங்கி, கொண்டவீடு, பேரூரு பகுதிகளைச் சேர்ந்த மேலும் சிலர் நம் விபூதி சித்தர் தாத்தாவுடன் இவ்விடம் வந்து சேர்ந்தது தெரிகிறது.  

குலதெய்வம் ஸ்ரீ மஹாமாரியம்மன்

       

ஆத்தாளே எம் குலத்தைக் காப்பவளே

அய்யம்பாளயத்தாளே மகாமாரித்தாயே

மூத்தாளே சர்வசக்தி படைத்தவளே  

மும்மூன்று கோள்களை அடக்குபவளே

 

முகத்தவளே பொலிவான பொன்னவளே

மந்திர உருவேற்றும் பசுமை நிலத்தவளே

அகத்தவளே தலைமுறையைக் காப்பவளே

அறம் வளர்த்த மூதாதையர் திருவுருவே

 

சிவகாமியே சகலமும் தர அமர்ந்தவளே

சிறப்புடன் பாய்ந்தோடும் காவிரியாளே

மகமாயியே பரம்பரையை நடத்துபவளே

மங்களநாயகியே வரமளித்து ரட்சிப்பாயே
                                          

அய்யம்பாளையத்தில் காவேரிக்கு முன்பாக மஞ்சள்/கரும்பு விளையும் பூமியின் ஈசான பகுதியில் விபூதி சித்தரின் சமாதி பீடம் உள்ளது. அரசமரத்தடியில் எட்டடி ஆழத்தில் அவர் சமாதி கொண்டுள்ளார். கடந்த 2021 குரு பூர்ணிமா நாளில் அவருடைய சமாதி பீடம் புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது அவரே கட்டளைகள் தந்து வழி நடத்தினார். அரசமரத்தில் கட்டியிருந்த கருப்பசாமியின் மணி அன்றிரவு தானே சில நொடிகள் அடித்து நின்றதையும் கிராமத்தார் சொன்னார்கள்.

   

விபூதி பச்சைக்கற்பூரம் துளசி இலைகள் நிறைய போட்டு யந்திர தகடு வைத்து அதன்மேல் மணல் பரப்பி பீடம் எழுப்பவேண்டும் என்றும், அதன்மேல் செதுக்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டாம் என்றும், காவேரியிலிருந்து நெடிய கூழாங்கல்லை எடுத்துவந்து சிவலிங்கமாக நட்டு ஸ்தாபனம் செய்தால் போதும் என்றும், தினமும் தூபதீபமும் காட்ட உத்தரவிட்டிருந்தார். நான்கரை நூற்றாண்டுகளாய் அன்று முதல் இன்றுவரை அரசமரத்தடியில் தாத்தாவின் பீடத்தைக்காவல் காப்பது சங்கிலி கருப்பணார்.

தினமும் அத்தலத்தின் பொறுப்பாளர் பக்தியுடன் காலை ஏழு மணிக்கு முன்பாக ஆறுவகை மலர்கள் வைத்து, தீபம் ஏற்றி, தூபம் காட்டி எங்களுக்குப் படங்கள் அனுப்பிவருகிறார். எம் குலதெய்வ மகாமாரியம்மன் அருள் பாலிக்கும் நிலமும், தாத்தாவின் சமாதி பீடமுள்ள நிலங்களும் முன்னொரு காலத்தில் எங்கள் வம்சத்து சொத்தாக இருந்ததாம். பிற்பாடு இந்த நானூற்று அறுபது ஆண்டுகளில் அந்த நிலங்கள் பல கைகள் மாறி தற்போது அவ்வூர் நிலக்கிழார்கள்வசம் உள்ளதாகக்  கேள்விப்பட்டோம்.

சித்தயோகியர் /ஞானியர் சமாதிகளை அமைப்பதற்கு ஏற்ற இடங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? திருமூலர் பாடலில் இது பற்றிய சில குறிப்புகள் உள்ளன.

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை

நன்மலர்ச் சோலை நகரினற் பூமி

உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்

இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே

- (திருமூலர் 'திருமந்திரம்', 10ஆம் திருமுறை, 7 ஆம் தந்திரம், 19 - சமாதிக் கிரியை, பாடல் - 6) 

உடலின் இயக்கம் நின்றாலும் உயிர் அதிலேயே நிலைத்துவிடும். சிவனுடன் கலந்து சித்தியான யோகியர் ஞானியரை நிலவறையில் அமர்த்தவேண்டும். அதற்கு அவர்கள் வாழ்ந்த மனைப்பகுதி, ஆசிரமம், சாலையோரம், குளக்கரை, ஆற்றுப்படுகை, மலர்ச்சோலை, நகரத்தின் ஒரு செழிப்பான நல்ல இடம், வனம், மலைச்சாரல் போன்ற இடங்களைச் சமாதியறை குகைக்குத் தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறது திருமூலரின் இப்பாடல்.

ஸ்ரீ விபூதி சித்தரின் திருமுக தரிசனம்!

சமாதி பீடத்தில் பால் அபிஷேகம் செய்தபோது விபூதி சித்தர் தன் முகத்தைக் காட்டியுள்ளார். அவர் சமாதி பிரவேசம் செய்த காலம் 1561 AD. அன்றைய முகத்தைப் பெரிதுபடுத்தி உற்று நோக்கினால் தொங்கும் சடைமுன்னே சூர்யசந்திர சிகை ஆபரணம்அகன்ற நெற்றிஎடுப்பான பெரிய மூக்குமீசை தாடிகாதில் ருத்திராட்ச குண்டலம்என நுணுக்கங்கள் தெரிகின்றன. கண்கள் மூடியபடி சமாதியில் அமர்ந்துள்ளார். இன்றைய முகத்தில் நானூற்று அறுபது வயதுக்கான மிகவும் பழுத்த தோற்றமும்தீட்சண்யமான கண்களும்பெரிய மூக்கும்தாடியும் தெரிகிறது. தாத்தா நமோ நமஹ!

கரை அருகே சமாதி கொண்டுள்ள 

  கனிந்த முப்பாட்டர்க்கு முப்பாட்டரே

திரை விலக வெளிப்பட்ட பரனே 

   தலம் காக்குமெம் விபூதி சித்தரே

அரை நிழலில் நிலைத்த வாசியரே 

   அருளும் பொன்னெழில் யோகியே

சிரை வற்றாத எங்கள் குலகுருவே

   சிவமானவரே மகமாயி மைந்தரே

இரை சத்தம் கேளாமல் மாதவத்தில்

   இன்றும் அமர்ந்த சுப்பிரமணியரே

உரை பேசி வழிநடத்தும் தலைவரே

   உத்தம நாதரே ஓம் நமசிவாயமே!

 - எஸ்.சந்திரசேகர் 

தாத்தா நிகழ்த்தும் சித்து! 

குரு பூர்ணிமா நாளில் சிவலிங்க ஸ்தாபனம் செய்த அன்று சொரசொரப்பான கூழாங்கல் சிவலிங்கம் மீது அபிஷேகம் செய்யும் சமயத்தில் தாத்தா தன்னுடைய அன்றைய/ இன்றைய முகங்களை வெளிக்காட்டித் தரிசனம் தந்தார். படம் பிடித்துக்கொண்டேன். அவர் அன்று முதல் இன்றுவரை தன் வெவ்வேறு காலத்து முகங்களை ஓடும் Animation தொடர் படங்களாகவே காட்டுகிறார் என்பதை அண்மையில்தான் புரிந்து கொண்டேன். ஏனென்றால் ஒருமுறை வெளிப்பட்ட அதே முகம் போல் ஒவ்வொருமுறை அபிஷேகம் செய்யும் போதும் காட்டுவதில்லை. அபிஷேகம் நடக்கும் சமயம் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வயதில் முகத்தோற்றம் மாறிக்கொண்டே இருப்பது தெரிகிறது. அந்த முகங்களை நாம் இங்கே காண்பது போன்று மிகத்தெளிவாக வேறு யாரேனும் படம் பிடித்தார்களா என்பது தெரியவில்லை. தாத்தாவின் சித்துகளுக்கு அளவில்லை. ஓம் நமசிவாய. ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தாவின் சமாதி தலம் விரிவடைகிறது. அங்கே பூஜை செய்யபக்தர்கள் பிரார்த்தனைக்கு அமரஇப்போது சமாதிக்கு முன்பாக ஒரு விசாலமான ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

  




 

சிலர் கேட்டுக்கொண்டதன்பேரில் படத்தில் முகங்கள் தெளிவாகத் தெரிய தனித்தனியே எடுத்து இணைத்துள்ளேன். முதல் பார்வையில் சிலர் கண்டுகொண்டனர் என்றும்சிலர் இருமுறையேனும் உற்று நோக்கியபின் கண்டு வியந்தார்களாம்.


சோம்பலற்ற நெடிய பெருந்தவம்! 

'தாண்டவராயக் கோனார் கூற்று' பாடல்களில் இடைக்காடர் உரைத்தவை விபூதி சித்தர் தாத்தாவைப்பற்றி உணர்த்தியதாகவே எனக்குத் தெரிந்தது.

தொல்லைப் பிறவியின் தொந்தமுற்ற அறவே

சோம்பலற்றுத் தவஞ் செய்யாக்கால்

எல்லையில் கடவுள் எய்தும் பலம் உமக்கு

இல்லையென்று எண்ணுவீர் கோனாரே (பா. 4) 

ஸ்ரீ விபூதி சித்தர் தந்த தகவல்படி தன் வம்சாவளியில் ஒவ்வொரு தலைமுறையிலும் இதுகாறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்துச் சில சக்திகள் கொடுத்து யோகியாக, ஞானியாக, சித்தராகத் தயார் செய்து வந்துள்ளதாகவும், தெய்வத்துடன் அந்த ஆன்மா இணைப்புப்பாலமாக இருக்கும் என்பதையும் உணர்த்தினார். அஷ்டசித்தி பெற்ற என் சித்தர் தாத்தா எந்த அளவுக்கு உழைத்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும். நினைத்தாலே வியப்புதான் மேலோங்குகிறது. பிறவித்தொல்லைகள் இனி கூடாது, சிவனருளால் அஷ்டசித்திகள் கைவரப்பெற்று, சமுதாய நலனுக்குச் சேவையாற்ற இறையின் பலத்தைப் பெற உழைத்துள்ளார். இன்றும் சமாதியிலிருந்து வழி நடத்துகிறார். அவருடைய வம்சாவளியில் நான் 13ஆவது தலைமுறையைச் சேர்ந்தவன்.

இன்னும் ஆயிரம் வருடங்கள் சமாதியில் இருந்து அவ்வூர் செழிக்கவும் ஊர் மக்கள் தம் வினைகளைக்கடந்து தர்மநெறியில் நடந்து மகிழ்ச்சியுடன் வாழவும் அருள் புரிவதாய்ச் சொல்லியுள்ளாராம். அவர் பீடத்தில் பூசித்த எலுமிச்சைப் பழத்தை, காப்புக் கயிறை வீட்டில் வைத்தால் குடும்பத்திற்கு யாரேனும் செய்த பில்லி சூனியமும் விலகிவிடுவதாக ஊர் மக்கள் சொன்னார்கள். 


கட்டளையிடும் சித்தர்!
 

அண்மையில் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் செயற்குழு உறுப்பினர் கனவில் எம் தாத்தா தோன்றி அவருக்குச் சில கட்டளைகளைத் தந்துள்ளார். அவரும் அவருடைய இரு பங்காளிகளும் சேர்ந்து அந்த ஊரில் வீடுதோறும் வாசலில் நின்று பிக்ஷை அரிசி வாங்கி அதில் சோறு பொங்கி, அதைத் தன் சமாதி பீடத்தில் மொத்தமாக அன்னலிங்கமாய்ப் பிடித்து வைத்து ஆராதனை செய்யுமாறு பணித்துள்ளார். பிறகு அங்கு வருவோர்க்கு அன்னதானம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து எம் தர்மகர்த்தா பேசி அனுப்பிய ஆடியோ மெசேஜ் போட்டுக்கேட்டோம். ஆகையால் தற்போது இந்த நிலக்கிழார்களான அவர்கள் இதைச் செய்தால், அவர்களின் மூதாதையர்கள் அறிந்தோ/ அறியாமலோ செய்த செயல்களால் விளைந்த பலவித தோஷங்களை நிவர்த்தி செய்து, ஊர் மக்களை நோய்நொடியின்றிக் காத்து, கிராமத்தையே செல்வச்செழிப்பானதாய் உயர்த்திட சித்தம் கொண்டுள்ளதாகச் சொல்லியுள்ளாராம்.  


சமாதியில் சித்தரின் மகனும் மகளும்!

ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தாவின் மகன் (சந்திரமௌலி), மகள்  (வேங்கடம்மா) பாலமுருகன் கோயில் முன்பாக வேப்பமரங்களின் கீழே சமாதியில் உள்ளனர். அக்ரஹார குன்னத்தூர் அய்யம்பாளையத்தில் பசும் வயல்கள் சூழ்ந்த நிலத்தருகே அமைதியாய் ஓடுகிறது காலிங்கராயன் கால்வாய். இவர்களுக்குப்பின் இந்த வம்சாவளியில் வந்த சித்தர்கள் என்றால் வெங்கடசெஷன், நவாப் சோமயாஜுலு ஆகியோர். குலதெய்வ மகாமாரியம்மன் பீடத்திற்குக் கீழே சித்தர் தாத்தாவின் தாயார் சொர்ணம்மா சித்தர் ஆழ்ந்த சமாதியில் உள்ளார். தன் காலத்தில் நித்திய அக்னிஹோத்ரம் செய்தவர் நம் சித்தர் தாத்தா. அவர் பூசித்து வந்த கல்யாண சுந்தரேசுவரர் ஸ்படிக லிங்கமும் சாளக்ராமங்களும் இன்று புதுவையில் முப்பாட்டரின் பங்காளி வகையறாவிடம் உள்ளது.


வசூல் செய்த சித்தர்!

ஸ்ரீ விபூதி சித்தர், பாம்புச் சித்தர் சமாதி கொண்டுள்ள சித்தர் காடு பூமிதான் இந்த குன்னத்தூர் ஆக்ரஹாரம். இவர்களின் சக்தி வெளிப்படத்தொடங்கிய பிறகு, தங்கள் விளை பூமியிலும்/வாழ்க்கையிலும் பொருளாதார மேம்பாடு கண்கூடாகத் தெரிவதாக அங்குள்ள நிலக்கிழார்கள் அண்மையில் வியந்து சொன்னார்கள். பலகாலமாய் இழுத்தடித்த வழக்கு வியாஜ்யங்கள் தங்களுக்குச் சாதகமாக முடிந்ததாகக் கூறினார்கள்.

இவர்களில் ஒருவரான பொறுப்பிலுள்ள கோயில் தர்மகர்த்தா தனக்கு நடந்த அமானுஷ்யத்தை விவரித்தார். ஒரு சமயம் இவர் கும்பகோணம் போயிருந்தார். அங்கே திடீரென ஒரு பழுத்த கிழவர் இவரை வழிமறித்து "டேய்... எனக்கு ஒரு கைத்தடி வாங்கித்தா" என்று கேட்டுள்ளார். இவர் சாதாரணமான ஒரு தடியை எடுத்துக்காட்ட, "அதில்ல... எனக்கு இதுதான் வேணும்" என்று விலை உயர்ந்த ஒன்றைக் காட்டிக் கறாராய்ச் சொல்லியுள்ளார். "என்னுத வெச்சிகிட்டு தானே வாழற நான் கேட்டதை நியாயமா வாங்கித்தா" என்று அதட்டியுள்ளார். கடையை விட்டு வெளியே வந்ததும் "ஒரு சொம்பு கரும்பு ஜூஸ் வாங்கித்தா" என்று கேட்டுவாங்கிக் குடித்தபின் வந்த வழியே போய்விட்டார்.

ஊருக்கு வந்தவர் பிறகு மாரியம்மன் கோயிலுக்குப் போனபோது அங்கே இவருக்கு அருள்வாக்கு சொன்னார்களாம். "என்னா கும்பகோணம் போய் வந்து குழப்பமா இருக்கா? உன் வம்ச சாபம் எல்லாம் உன்னைவிட்டு இப்ப போயிடுச்சு" என்றுள்ளார்.

இவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. "உன் பாட்டன் அந்த பக்கமா இருக்குற சித்தர் காட்டுல எதையோ தோண்ட அங்க வைரம் வைடூரியம் கிடைச்சிருக்கு. அதை வித்து அந்த காசுல நிலபுலன் வாங்கிப் போட்டாரு. அது உங்க குடும்ப நிம்மதியை கெடுத்து செழிக்க விடலை. ஆனா இப்ப எல்லாம் சரியா போச்சு. அந்த சித்தர் ஐயா உன்கிட்ட கைத்தடியும் குடிக்க பழச்சாறும் வாங்கிட்டு போயிட்டாரு தானே" என்றதும் இவர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.

சமாதி கிரியை செய்யும்போது தேகத்தை அமர்த்தும் முன் குழியின் அடியில் பஞ்சலோகம் நவரத்தினங்கள் போடுவது வழக்கம். அந்த நிலத்தில் இவருடைய பாட்டன் வகையறாவுக்கு வைரம் கிடைக்க, அதை விற்று நிலங்கள் வாங்கிப்போட்டார். அது வளம் தராமல் சந்ததிகளைப் பாடாய்ப் படுத்தியுள்ளது. ஆக இப்படியாக அவரவர் குடும்ப வம்சத்தில் வரும் ஊழ்வினைச் சாபம் நிவர்த்தியாக ஒரு நூற்றாண்டு ஆகிவிடுகிறது. யாருக்கும் வினைச்செயல் எந்த ரூபத்திலும் வந்து ஆசைக் காட்டி மோசம் செய்யலாம். தரும நெறிப்படி வாழ்ந்தால் அவரவர் சந்ததிகள் தப்பிக்கும். 

வந்து போன என் விபூதி சித்தர் தாத்தாவின் சமாதியில் நாகாபரணமும், மலர்களும், ஒரு கைத்தடியும் வாசிக்கோலும் உள்ளது. அங்கிருந்து சற்றே நடந்து போனால் பாலமுருகன் கோயில் கருவறைப்பீடம் அடியில் பாம்பு சித்தர் (ஸ்ரீபாலசுப்ரமணியம்) சமாதியுமுள்ளது. உத்தராயண புண்ணிய காலம் தை முதல் நாள் பாம்புச் சித்தர் சித்தியானார். அதனால் இன்றும் எங்களுக்கு மறுநாள்தான் பொங்கல் பண்டிகை. குலதெய்வ மஹாமாரியம்மன் துணை நிற்கிறாள். எல்லாம் சிவ சித்தம்! பாம்புச் சித்தர் நம் விபூதி தாத்தாவுக்கு அத்யந்த சிஷ்யராக ஸ்வீகாரம் வந்ததால் சித்தமரபில் இவருடைய மகனாகவே பாவிக்கப்படுவார். 


சித்தர் தரிசனம் தரும் காணொளி!
 

சமாதியில் மாறும் நிலைகள்!

ஸ்ரீ விபூதி சித்தர் தாத்தா கடந்த நான்கரை நூற்றாண்டுகளாய் ஜீவசமாதியில் இன்னும் உள்ளாரா? ஆமாம்! அவர் எப்போது வெளியே வருவார்? தெரியாது! வர அவசியமே இல்லாமல் உள்ளேயே தன்னுடைய சமாதி காலத்தை மேலும் நீட்டிக்கலாம். 

பொதுவாகவே ஜீவசமாதி என்பது கருவறையில் குழந்தை உள்ளது போன்ற ஒரு நிலை. உயிர் உடலிலேயே ஒடுங்கி இருக்கும். சுவாசமானது உட்புறமாக நடக்கும். அதாவது கருவறையில் உள்ள ஒரு சிசுவுக்கு நடப்பதுபோல். இந்நிலையில் பசி தாகம் தூக்கம் எதுவுமே இருக்காது. அது நித்தியமான பூரண சதாசிவ நிலை. 


வள்ளலார் அடைந்த சுத்த ஜோதி நிலை என்பது உடலைப் பஞ்சபூத உதவியுடன் கற்பூரமாகக் கரைத்து ஒளிரூப நிலையை அடைவது. இதுதான் ஆன்மீகத்தில் ஒருவர் அடையும் உச்சபட்ச நிலை. ஔவையார், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், ஆகியோர் இந்த நிலையை அடைந்தவர்கள். கிரியா மஹாவதார் பாபாஜியும் அவருடைய பிரதான சீடர் லஹிரி மஹாசயரும் இந்நிலையை எய்தினர். நமக்குத் தெரியாமல் இன்னும் பலர் இருக்கலாம். தூலம்/ சூட்சுமம்/ ஒளி என நிலைகளில் மாறியபடி இவர்கள் பிரவேசிப்பார்கள். 

சமாதி நிலைகள் பலவகைப்படும் என்று போகர் சொல்கிறார். தன் பாடலில் சொன்ன நிருவிகல்ப சமாதி நிலை எவ்விதம் இருக்கும் என்பதை அவர் தன்னைச் சீனராக வெளிப்படுத்திச் செய்து காட்டிய பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். அதுவரை நிருவிகல்பத்தில் அமர்ந்தவரது நிலை எப்படி இருக்கும் என்பது எனக்கும் தெரியாது. ஆக என் மூதாதையர் தாத்தாவும் இதுநாள்வரை இந்நிலைகளில் எல்லாம் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. 

என் முப்பாட்டன்களுக்கு முப்பாட்டனாக, கடந்த நான்கரை நூற்றாண்டுகளில் எங்கள் வம்சத்தில் வாழ்ந்து மறைந்த மூதாதையர்களின் மூதாதையராக இன்றும் நிலவறைச் சமாதியில் யோக நிஷ்டையில் நிலைத்திருக்கும் தாத்தா ஸ்ரீ விபூதி சித்தர் பாதங்களுக்குப் போற்றி! குலதெய்வ ஸ்ரீ மஹாமாரியே போற்றி! காவல் செய்யும் ஸ்ரீ சங்கிலிக் கருப்பரே போற்றி! 

முகவரி:

விபூதி சித்தர் ஸ்ரீ சுப்பாராவ் பீடம் (ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் அருகில்) அக்ரஹார குன்னத்தூர்தபால் ஆபீஸ் தெருகு.அய்யம்பாளையம், வழி: பரமத்தி வேலூர்நாமக்கல் மாவட்டம். Pin. 637213

கோயில் திருவிழா, தரிசன நேரம், சித்தர் குருபூஜை பற்றிய விபரங்களுக்கு    திரு.மோகன்ராஜ் +919443717217 அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


என்னுடைய கட்டுரைப் பதிவை வாசித்து மகிழ்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. 🙏

எஸ்.சந்திரசேகர்


Comments

ransun said…
அருமை அருமை அருமை எங்கள் தெய்வீக சித்த குருவே உங்கள் குல வழித்தோன்றல் ஆன உங்கள் தாத்தா ஸ்ரீ விபூதி சித்தர் சுவாமிகளே போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம். உங்களை அவர் தேர்ந்து எடுத்து உள்ளது நன்கு உணரமுடிகிறது. உங்கள் சிஷ்யர்களான எங்களுக்கும் அருமை பெருமை மேன்மை உண்மை நேர்மை செம்மை திறமை இறைமை மெய்ம்மை யான எங்கள் சித்தர் தாத்தாவும் அவர்களே. உங்களால் எங்களுக்கு கிடைத்த பாக்கியம் தாயுமானவரே சிவனின் பரிபூரண புத்திரனே சித்த குருவே வாழ்க பல்லாண்டு இறையின் பரிபூரண ஆசீர்வாதங்கள் அனுக்கிரகம் அனுபூதியோடு நீடூழி வாழ்கவே.
லலிதாம்பிகை பொய்யாமொழி.
vengat said…
ஓம் நம சிவாய நீங்கள் இதற்காகவே இப்பிறவி எடுத்து உள்ளீர்கள் விபூதி சித்தரின் வம்சாவளி வாரிசான உங்களை சந்திக்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கும் அந்த சிவனுக்கும் விபூதி சித்தருக்கும் கோடானு கோடி நமஸ்காரம். நாம் அனைவருக்கும் ஏதோ ஒரு பிறவியில் இந்த மகானுடன் ஒரு ஆத்மார்தமான தொடர்பு இருந்தால் மட்டுமே இந்த பதிவினை படிக்க முடியும். வருங்காலதில் இந்த பீடத்தை வழி நடத்தும் பாக்கியம் பெற்ற விபூதி சித்தரின் வாரிசாகிய உங்களுக்கும் உங்களை பெற்ற உங்கள் தாய் தந்தையாருக்கும் என் ஆத்ம நமஸ்காரம். உங்களை எமக்கு அடயாளம் காட்டிய prapanchatthirkkum , விபூதி சித்தர் அவர்களுக்கும், அந்த சிவனுக்கும், திருமதி லலிதா பொய்யாமொழி அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் மற்றும் ணமஸ்காரங்கள். விபூதி சிததரே போற்றி போற்றி. ஓம் நம சிவாய ஸ்ரீ வீர பிரமேந்திரர் நமோ நம,
Dinesh Asokan said…
its a wonderful post .. nice to know the complete details of Vibuthi siddar ..Shivaya nama
Peace said…
சில மாதங்களுக்கு முன்பு விபூதி சித்தர் பற்றிய பதிவு முகநூலில் பார்த்தேன். அவரின் தரிசனம் சரியாக கிடைக்கவில்லை .
இன்று blog மூலமாக அவரின் தரிசனம் மன நிறைவை தந்தது.
சந்திரசேகர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
என்றும் தங்கள் வழிகாட்டுதலில்
ரித்தீஷ்
Royal Enfield said…
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
B said…
Feeling Blessed Anna
Anonymous said…
சித்தரின் முக தரிசனம் ஆச்சரியப்படுத்துகிறது. 🙏